கடந்த ஆண்டை விட கோலார் தங்கவயலில் 10 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோலார் தங்கவயலில் 10 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

Update: 2018-05-13 22:00 GMT
கோலார் தங்கவயல்,

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோலார் தங்கவயலில் 10 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

10 சதவீதம் அதிகரிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில், கோலார் தங்கவயல் தொகுதியில் 72.28 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 62 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கோலார் தங்கவயல் தொகுதியில் நகர்ப்புறங்களில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஆனால், கிராமப்புறங்களில் 115 வாக்குச்சாவடிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புற மக்களே ஆர்வத்துடன் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுக்கடைகளில்...

சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 2 நாட்களாக கோலார் மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் மதுக்கடைகளை நோக்கி படையெடுத்தனர். மாவட்டத்தில் ஏராளமான மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை என்பதால், மதுக் கடைகள் அடைக்கப்பட உள்ளது. இதனால் ஏராளமான மதுப்பிரியர்கள் முன்கூட்டியே கூடுதல் மதுபானங்களை வாங்கிக் கொண்டு சென்றனர்.

தேர்தல் சூதாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சூதாட்டம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. அதிலும், கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் 110 பேர்களில் யார் வெற்றி பெறுவார்கள்?, யார் எவ்வளவு வாக்கு வாங்குவார்கள்? என்பது தொடர்பான சூதாட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இந்த சூதாட்டம் அதிகமாக நடக்கிறது.

மேலும் செய்திகள்