அரசு பஸ் மீது லாரி மோதல்: பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் 10 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-13 23:15 GMT
தாடிக்கொம்பு, 

கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. கோவை மாவட்டம் கண்ணாபாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 43) பஸ்சை ஓட்டி வந்தார். ரகுபதி (50) என்பவர் கண்டக்டராக இருந்தார். இதேபோல திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. லாரியை ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பெருமாள் (49) ஓட்டினார். திண்டுக்கல்-பழனி சாலையில் திண்டுக்கல்லை அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை டிரைவர் முந்த முயன்றார். அப்போது எதிரே கோவையில் இருந்து வந்த பஸ் மீது லாரி மோதியது.

இதில் பஸ் டிரைவர் சரவணன், கண்டக்டர் ரகுபதி, லாரி டிரைவர் பெருமாள், பஸ்சில் பயணம் செய்த கோவையை சேர்ந்த தமிழரசி (22), சரோஜா (49), செல்வி (27) ஆகியோர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேர் பெண்கள் ஆவர். மேலும் பஸ் மற்றும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இதையடுத்து படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்