பெருந்துறை அருகே சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்ற பக்கத்து வீட்டு பெண் கைது

பெருந்துறை அருகே சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொன்ற பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-05-13 23:41 GMT
சென்னிமலை, 

ஈரோடு, பழையபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 34). அவருடைய மனைவி கனகா (29). இவர்களுடைய மகள்கள் வினோ (9), கனிஷ்கா (7) . சண்முகநாதன் தனது குடும்பத்துடன் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம், அங்கப்பா வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

வினோ கருமாண்டிசெல்லிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். கனிஷ்கா அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். சண்முகநாதன், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும், கனகா, திங்களூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று காலை சண்முகநாதனும், கனகாவும் வேலைக்கு சென்றுவிட்டார்கள். கனிஷ்காவும், வினோவும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் கனிஷ்கா மட்டும் கருமாண்டிசெல்லிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தடியில் மயங்கி கிடந்தாள். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கனிஷ்காவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறுமியின் கழுத்து, உதடு, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக்காயம் இருந்தது. சிறுமி கீழே விழுந்து அடிபட்டு இறந்தாளா? அவள் எப்படி இறந்தாள்? என்பது மர்மமாக இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கனிஷ்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் முதலில் சிறுமி மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கனிஷ்கா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டார்கள். தீவிர விசாரணையில் கனிஷ்காவை அவளது பக்கத்து வீட்டில் வசிக்கும் கமலக்கண்ணனின் மனைவி வனிதா (33) தோளில் தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கனிஷ்காவை கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஒரு மரத்தடியில் போடுவதற்காக தோளில் தூக்கி சென்றதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் சிறுமி மர்ம சாவை கொலை வழக்காக பதிவு செய்து வனிதாவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வனிதா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் குன்னூர் தூளுர்மட்டம். நான் கடந்த 2009-ம் ஆண்டு கமலக்கண்ணன் (35) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கருமாண்டிசெல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்தோம். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதி உடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் நட்பாக பழகி வந்தோம்.

கனகாவின் கணவர் சண்முகநாதன் குடிபோதைக்கு அடிமையாகி, குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் என்னுடைய கணவருக்கும், கனகாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கனகாவின் மகள் கனிஷ்காவை என் கணவர் தன் மகள் போல் பாவித்து வந்து அவளுக்கு செலவு செய்து வந்தார். இதன் காரணமாக எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கனிஷ்காவை தின்பண்டங்கள் தருகிறேன் வா எனக் கூறி வீட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கு அவளது வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்தேன். இதில் அவள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தாள். பின், சிறுமியின் உடலை தோளில் தூக்கிச் சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் போட்டு விட்டு வந்துவிட்டேன். ஒன்றும் நடக்காதது போல் இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டார்கள்.

இவ்வாறு வனிதா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட வனிதா பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்