பா.ஜனதா முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அரசியலில் ஈடுபடக்கூடாது எனக்கூறி பா.ஜனதா முன்னாள் கவுன்சிலரை கொல்ல மர்மநபர்கள் முயற்சி செய்தனர்.

Update: 2018-05-14 21:45 GMT
பெங்களூரு,

அரசியலில் ஈடுபடக்கூடாது எனக்கூறி பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரை ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலை மறைவான மர்மநபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு வி.வி.புரம் அருகே வசித்து வருபவர் வேதவ்தாஸ் பட். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் கவுன்சிலர் ஆவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வேதவ்தாஸ் பட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலையில் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்று விட்டு அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்மநபர்கள் வேதவ்தாஸ் பட்டை வழிமறித்தார்கள்.

பின்னர் அந்த மர்மநபர்கள் தங்களிடம் இருந்த இரும்பு கம்பிகள், ஆயுதங்களால் வேதவ்தாஸ் பட்டை சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்று விட்டார்கள். வேதவ்தாஸ் பட்டை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று வி.வி.புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்மநபர்கள், தன்னிடம் அரசியலில் ஈடுபட கூடாது என்றும், அரசியலில் ஈடுபட்டால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்று கூறியபடியே இரும்பு கம்பிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியதாக போலீசாரிடம் வேதவ்தாஸ் பட் தெரிவித்தார். மேலும் மர்மநபர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளின் எண்ணையும் அவர் போலீசாரிடம் வழங்கினார்.

இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்