வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 435 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பெண்கள் கைது

வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 435 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-14 22:45 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் ஜெகதாப்பட்டினம் பஸ் நிலையத்தில் வந்து நின்றது. அதில் இருந்து 3 பெண்கள் மூட்டைகளுடன் இறங்கினர். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் புதுச்சேரியில் இருந்து 435 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விநாயகம் மனைவி செல்வி (வயது 45), செல்வம் மனைவி ராமாயி (50), மலைராஜ் மனைவி ராஜேஸ்வரி (40) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு, பட்டுக்கோட்டைக்கு வந்து, அங்கிருந்து பஸ்சில் ஜெகதாப்பட்டினம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வந்து, 3 பெண்களையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்