கல்லூரி பேராசிரியர் கொலை வழக்கு: ராக்கெட் ராஜாவிடம் 2 நாள் காவலில் விசாரணை நடத்த போலீசுக்கு அனுமதி

கல்லூரி பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவிடம் 2 நாள் காவலில் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்து நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-05-14 23:15 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா நகர் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் நெல்லையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அனுசுயா. செந்தில்குமார் அவருடைய மாமனார் கொடியன்குளம் குமார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி காலை செந்தில்குமாரை ஒரு கும்பல் வீடு புகுந்து வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணையில், பாளையங்கோட்டையில் ஒரு நிலத்தை வாங்குவது தொடர்பாக டாக்டர் பாலமுருகனுக்கும், பேராசிரியர் செந்தில்குமாரின் மாமனார் கொடியன்குளம் குமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதில் கொடியன்குளம் குமாரை கொலை செய்ய வந்த கும்பல் செந்தில்குமாரை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகி ராக்கெட் ராஜாவை போலீசார் தேடி வந்்தனர்.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 6-ந் தேதி இரவு ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை பாதுகாப்பு கருதி கோவை மத்திய சிறைக்கு மாற்றினர்.

இந்த நிலையில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை கோவை சிறையில் இருந்து ராக்கெட் ராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் நெல்லைக்கு அழைத்து வந்தனர். மதியம் 12.30 மணிக்கு நெல்லை கோர்ட்டு வளாகத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு (தீண்டாமை) கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் நீதிபதி சந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரா, பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆனால், அந்த கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேராசிரியர் கொலை வழக்கு தொடர்பாக ராக்கெட் ராஜாவிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, ராக்கெட் ராஜா தரப்பில் வக்கீல் பால் கனகராஜ் ஆஜரானார். அவர் வாதாடுகையில், ராக்கெட் ராஜாவை ஏற்கனவே சுட்டு பிடிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் அவரை போலீஸ் காவலில் அழைத்துச் செல்ல அனுமதி அளித்தால், என்கவுன்டரில் கொலை செய்து விடுவார்கள். எனவே, போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதி அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ராக்கெட் ராஜாவை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மட்டுமே ராக்கெட் ராஜாவிடம் விசாரணை நடத்த வேண்டும். ராக்கெட் ராஜா தனது வக்கீலிடம் தினமும் 1 மணி நேரம் சந்தித்து பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு ராக்கெட் ராஜாவை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ராக்கெட் ராஜாவை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக ராக்கெட் ராஜா கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். அவர்கள் ராக்கெட் ராஜா கோர்ட்டுக்குள் சென்றபோது வாழ்த்து கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு நிலவியதால் நெல்லை கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்