திருப்பூரில், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்: தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் 100 பேர் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பிரசார நடைபயணம் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் நேற்று நடைபெற்றது.

Update: 2018-05-14 22:45 GMT

திருப்பூர்,

தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பிரசார நடைபயணம் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சுப.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் மணிமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னம்பாளையத்தில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பல்லடம் ரோட்டில் ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றனர். அதற்குள் 30 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து பெரிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்