கோவை மாநகர பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகைபறித்த 2 பேர் கைது

கோவை மாநகர பகுதியில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதுபோன்று படிப்பில் நாட்டம் இல்லாததால் திருடவந்த சிறுவனும் போலீசில் சிக்கினான்.

Update: 2018-05-14 23:12 GMT
கோவை,

கோவை மாநகர பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பெண்கள் நகை அணிந்து தனியாக நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பெண்களிடம் நகை பறிக்கும் மர்ம ஆசாமிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் தெற்கு பகுதி உதவி கமிஷனர் சோமசுந்தரம், ராமநாதபுரம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் பாபு, சண்முகம், அசோக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவைப்புதூரில் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து உதவி பேராசிரியையிடம் இருந்து நகையை பறித்துச்செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலையில் குனிய முத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), மணிகண்டன் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் கோவை மாநகர பகுதியில் உள்ள சிங்காநல்லூர், ராமநாதபுரம், கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்துச்சென்று 3 பெண்களிடம் 12 பவுன் நகையை பறித்துச்சென்றதும், குனியமுத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 2 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரை கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கைதான 3 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இதில் 17 வயது சிறுவன் புதுச்சேரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தான். அவனுக்கு சரியாக படிப்பு ஏறவில்லை.

இதையடுத்து விக்னேஷ், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து திருட தொடங்கினான். அதில் நல்ல வருமானம் கிடைத்ததால், படிப்பை கைவிட்டு அவர்களுடன் சேர்ந்து திருட்டில் இறங்கினான்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து 3 பெண்களிடம் நகையை பறித்ததுடன், ஒரு வீட்டில் புகுந்து திருடியும் உள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து தனது எதிர்காலத்தையே அந்த சிறுவன் இழந்துவிட்டான்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்