தூண் சாய்ந்து 8–ம் வகுப்பு மாணவி சாவு சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது பரிதாபம்

திங்கள்சந்தை அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது தூண் சாய்ந்து 8–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2018-05-15 23:15 GMT
அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பவுசிகா (வயது 13), ஜெபிஷா (7) என இரண்டு மகள்கள். தேவிகா கூலி வேலைக்கு சென்று மகள்களை வளர்த்து வந்தார். மூத்த மகள் பவுசிகா அருகில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பும், இரண்டாவது மகள் ஜெபிஷா 2–ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இவர்களது வீட்டின் முன்பகுதியில் ஒரு தூண் கட்டப்பட்டு இருந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுமிகள் தூணில் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்தனர். நேற்று காலையில் பவுசிகா, வீட்டின் முன் இருந்த தூணுக்கும், அருகில் உள்ள ஜன்னல் கம்பிக்கும் இடையே சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென சேலை கட்டப்பட்டு இருந்த தூண் சாய்ந்து பவுசிகா மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி சிறுமி பவுசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இதற்கிடையே தூண் சாய்ந்த சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்த தேவிகா வெளியே ஓடி வந்தார். அப்போது, பவுசிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவுசிகாவின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்