அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு திடீர் வலிப்பு மரத்தில் மோதி நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்

அறந்தாங்கி அருகே அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவர் பஸ்சை மரத்தில் மோதி நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-05-15 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 47). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று மாலை அறந்தாங்கியில் இருந்து சிலட்டூருக்கு அரசு டவுன் பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் கண்டக்டர் நாராயணசாமி மற்றும் 48 பயணிகளும் இருந்தனர்.

கூத்தாடிவயல் பகுதியில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் சென்றபோது, டிரைவர் ஜெயராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். வலிப்பு தொடர்ந்த நிலையிலும் டிரைவர் ஜெயராஜ் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோர பள்ளத்தில் இறக்கி மரத்தில் மோதி நிறுத்தினார்.

பயணிகள் உயிர் தப்பினர்

இதில் பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். உடனடியாக பயணிகளும், கண்டக்டரும் சேர்ந்து டிரைவர் ஜெயராஜை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வலிப்பு ஏற்பட்டபோதும் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் பஸ்சை மரத்தில் மோதி நிறுத்தி, சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவரின் செயலை பயணிகளும், அப்பகுதி மக்களும் பாராட்டினர். 

மேலும் செய்திகள்