சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று நடைபெற்றது.

Update: 2018-05-15 22:30 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும் பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஷ்வர, சதாசிவம்) ஐம்பெரும் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சப்பிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக 6-ந் தேதி முதல் வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது. இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக ஒரு தங்க குடம் மற்றும் 24 வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் கொள்ளிடத்திலிருந்து யானை மீது கொண்டு வரப்பட்ட திருமஞ்சனம், கடைவீதி வழியாக கோவில் கொடிமரம் முன்பு உள்ளே நுழைந்து உற்சவர் சன்னதியை அடைந்தது.

இதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் கொண்டு வரப்பட்ட திருமஞ்சனத்திற்கு சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகாபிஷேகம் நடை பெற்றது. மாலை 6 மணிக்கு திருச்சி மகாஜனங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் சாத்தார வீதி புஷ்ப வியாபாரிகள் சார்பாக அம்மனுக்கு புஷ்ப சாத்துப்படி நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரதவீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்றும், கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் சுற்றி வந்து, பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், 18-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 2-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்