காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மை எரிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை எரித்தனர்.

Update: 2018-05-15 22:45 GMT
திருக்கடையூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை தராமல் துரோகம் செய்து வருவதை கண்டித்தும் நேற்று திருக்கடையூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் சங்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை திருக்கடையூர் பஸ் நிறுத்தம் வரை இழுத்து சென்றனர். பின்னர் அங்கு, பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

அப்போது அவர்கள், விவசாயிகளின் நலன் கருதி உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்கத்தின் தரங்கம்பாடி வட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட துணை தலைவர் குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அக்கட்சியினர் கொண்டாடி வரும்நிலையில், திருக்கடையூரில் பிரதமர் நரேந்திரமோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்