அரக்கோணத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

அரக்கோணத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

Update: 2018-05-15 22:47 GMT
வேலூர்,

அரக்கோணம் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் சரளா. இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது கணவருக்கு, அரக்கோணத்தை சேர்ந்த ஒருவர் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக எங்களிடம் பணம் கேட்டார். அதன்படி நாங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கொடுத்தோம்.

பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது வேலையும் வாங்கிக் கொடுக்காமல், உரிய பதிலும் சொல்லாமல் காலம் கடத்தி வந்தார்.

பின்னர் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுத்தார். மீதி ரூ.5 லட்சத்தை கொடுக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது பணத்தை கேட்டால் போலீசில் புகார் செய்யப்போவதாக கூறி மிரட்டுகிறார். எனவே எங்கள் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுமீது விசாரணை நடத்த அரக்கோணம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் வேலூரில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவர் ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.

இந்த புகார் மனு மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்