சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.96½ லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கூடலூர் பயணி கைது

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.96½ லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கூடலூர் பயணியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-15 22:51 GMT
கோவை,

கோவையில் இருந்து அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி கோவை வழியாக தங்கம் கடத்தப்பட்டு வருகின்றது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களை கைது செய்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ஹம்சா என்பவரின் மகன் உனைஷ் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை சோதனை செய்தனர். அதில் 52 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அதன் மொத்த எடை 2 கிலோ 988 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கடந்த 10-ந்தேதி இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இதில் திருச்சியை சேர்ந்த பயணிகள் முகமது இலியாஸ், ஷாஜகான், முஸ்தபா மைதீன், சாகுல் ஹமீது, சகாபுதீன், நசீர், முகமது அப்துல்லா ஆகியோர் கைப்பைகளை சோதனை செய்தனர்.

இதில் 2 கிலோ 40 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.65 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். மேலும் அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் இந்த மாதம் மட்டும் சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்