சரக்கு வேனில் தீப்பிடித்ததால் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

மதுரவாயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேனில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Update: 2018-05-15 23:13 GMT
பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜன்(வயது 38). சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், திடீர் நகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை தனது வேனில் ஏற்றினார். பின்னர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றார்.

நள்ளிரவில் சரக்கு வேனுக்கு மேலே சென்ற மின்சார வயர் காற்றில் உரசியதில் தீப்பொறிகள் வேன் மீது விழுந்தன. இதனால் வேன் தீப் பிடித்து எரிய தொடங்கியது. இதனைக்கண்டதும் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வானகரம் தீயணைப்பு வீரர்கள் வேனில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் வேனில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. அதோடு வேனின் பின்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்