போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: அ.தி.மு.க. பிரமுகர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அறிவித்துள்ளது.

Update: 2018-05-15 23:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர். இந்த மோசடியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு தலைமையில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் அதிரடியாக அவரிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டன. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியின் படத்துடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சந்துருஜி குறித்த விவரங்கள் தெரிந்தால் சி.பி.சி.ஐ. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்