காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி

கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

Update: 2018-05-15 23:32 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். கவர்னர் யாரை அழைப்பார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபிஆசாத், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முதல்-மந்திரி சித்தராமையா, குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காவிட்டால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஒருவேளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு என்ன செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவராக உள்ள பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சித்தராமையாவுக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்க கட்சியின் மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் செய்திகள்