ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-15 23:34 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் 2,100 பல்நோக்கு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி ஆய்வாளர், மெக்கானிக் போன்ற பதவி உயர்வு கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தட்டச்சு மற்றும் ஏவல் வேலைசெய்யும் 31 பேர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக கோப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்நோக்கு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் மெக்கானிக் மற்றும் பணி ஆய்வாளர் பதவி வழங்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர் சங்கம், குடிநீர் பிரிவு தொழில்நுட்ப தொழிலாளர் சங்கம் உள்ளடக்கிய கூட்டு போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து புதுவை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தனராசு தலைமை தாங்கினார். கூட்டுபோராட்டக்குழு நிர்வாகிகள் இளங்கோ, சரவணன், நாகராஜன், செழியன், வீரகுமார், ஆனந்தன், அப்துல் அஜீஸ், நாராயணன், நாவரசு, பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

மேலும் செய்திகள்