புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலத்தை அளவீடு செய்ய போலீசார் பாதுகாப்பு அளிக்காத நிலை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புகார்

மானாமதுரை அருகே புறவழிச்சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு போலீசார் உரிய முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-05-15 23:35 GMT
மானாமதுரை,

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணி ரூ.937 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது ரெயில்வே மேம்பாலங்கள், ராஜகம்பீரம் புறவழிச்சாலை பணிகள் மட்டும் தாமதமாகி வருகிறது. மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் புறவழிச்சாலை அமைக்க மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் கடந்த வாரம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மனு கொடுத்தனர்.

ஆனால் போலீசார் கோர்ட்டு அனுமதி வாங்கி வர சொல்லி அதிகாரிகளை திருப்பி அனுப்பி விட்டனர். நான்குவழிச்சாலை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டது. புறவழிச்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த பழைய ரோட்டில் மணல் கொட்டும் பணியும் தொடங்கி விட்டது. 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள புறவழிச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக ரோடு அமைகிறது. இதற்காக விவசாய நிலங்கள் அளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசார் பாதுகாப்பு அளிக்காத முன்வராத நிலையில் அங்கு பணிகள் தொடங்கப்படாத நிலை உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

ராஜகம்பீரம் ஊருக்குள் நான்கு வழிச்சாலை அமைத்தால் கோவில், பள்ளிவாசல், தேவாலயம் மற்றும் வீடுகள் என 192 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். ஆனால் பழைய ரோட்டையொட்டி 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தால் 51 கட்டிடங்கள் மட்டுமே இடிபடும். இதற்காக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டது. அவற்றை அளவீடு செய்து கையகப்படுத்துவதற்கு நில அளவைதுறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அளவீடு செய்யும் பணிக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தும் போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். போலீஸ் பாதுகாப்புடன் நிலங்கள் அளவீடு செய்யும் பணி முடிந்த பின்னர் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங் கப்படும். இந்த நெடுஞ்சாலை பணிக்காக மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை ஒப்படைத்து அதற்குரிய இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்தி கேட்டுள்ளனர்.

புறவழிச்சாலை அளவீடு செய்ய போலீசார் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்