கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சித்தராமையா கூறினார்.

Update: 2018-05-15 23:42 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி, முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது. இது தொடர்பான கடிதத்தை தேவேகவுடாவுக்கும், கவர்னருக்கும் கொடுத்துள்ளோம்.

மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. ஆட்சி அமைக்க 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எங்களுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதைத்தொடர்ந்து, குமாரசாமி கூறுகையில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளேன். இதில் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு நாங்கள் கவர்னரிடம் கூறினோம். வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வந்தவுடன் அதை ஆய்வு செய்துவிட்டு முடிவு எடுப்பதாக கவர்னர் கூறினார். எங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்“ என்றார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்