சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: உள்ளாட்சி தேர்தலை நடத்த அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-05-15 23:43 GMT
புதுச்சேரி,

புதுவையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்தநிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், வார்டு மறுவரையறை செய்யக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை 4 வாரத்துக்குள் முடித்துவிட்டு உடனே தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலக கருத்தரங்க அறையில் உள்ளாட்சித்துறை அமைச்சரான நமச்சிவாயம் நேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

கூட்டத்தில் உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன், சட்டத்துறை சார்பு செயலாளர் முருகவேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

வார்டு மறுசீரமைப்பின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் நமச்சிவாயம் கேட்டறிந்தார். இதுதொடர்பாக அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வசதியாக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டம் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சித்துறையில் வரிகள் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரியை உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் இடம் பெறுவார்கள் என்றார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமச்சிவாயம் கூறும்போது, கர்நாடகாவில் பணநாயகம் வென்றுள்ளது. ஜனநாயகம் வெற்றிபெறவில்லை என்று குறிப்பிட்டார். 

மேலும் செய்திகள்