சிவகாசி ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்; பொதிகை எக்ஸ்பிரஸ் தாமதம்

சிவகாசி ரெயில் நிலையத்தில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Update: 2018-05-15 23:30 GMT
விருதுநகர்,

செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ரெயில்வே யூனியனைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் பயணம் செய்தனர். இந்த ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்திற்கு இரவு 8.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது மற்ற பயணிகளை முன்பதிவில்லா ரெயில் பெட்டியில் ஏற அனுமதிக்காமல் அந்த பெட்டியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் கதவை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் தங்களை அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் யூனியன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் பயணம் செய்த பெட்டியில் மற்ற பயணிகளையும் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. 

மேலும் செய்திகள்