ராமநாதபுரம் அருகே, சுற்றுலா வேன்-மணல் லாரி மோதல்: 4 பேர் பலி

ராமநாதபுரம் அருகே, சுற்றுலா வேனும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-05-15 23:47 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

கன்னியாகுமரியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் 19 பேர் வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை கடந்து வளமாவூர் விலக்கு ரோடு அருகே வந்தது.

அப்போது எதிரே மணல் ஏற்றிய ஒரு லாரி வந்தது. இவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது.

வேனில் இருந்த குளச்சல் அல்லேப் மனைவி புனிதா (வயது 32), அதே ஊரைச்சேர்ந்த உப்பிரோஸ் மகன் புஷ்பராஜ்(36), அவருடைய மகன் மெர்சன்(12), வேன் டிரைவர் தேங்காய்ப்பட்டினம் தென்கரை பகுதியை சேர்ந்த ஜான் பிளாசஸ்(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும், வேனில் இருந்த கஜோலி, லிபினா, ஹெலன் ஜெனிபா, ஜேக்லின் பிஜோனா, லிபி, செல்வி, செசிலி, ஜெனிலின், அருள்சீலி, லாரி டிரைவர் அய்யாச்சாமி உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து குளச்சல் அமர்தியம் மகன் ரிச்சர்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்