திருப்பத்தூர் அருகே மயில் வேட்டையாடிய 4 வாலிபர்கள் கைது

திருப்பத்தூர் அருகே மயில் வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-05-15 23:47 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மிதிலைப்பட்டி கண்மாய் பகுதியில் நேற்று அதிகாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தலைமை காவலர் ஞானி மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் 4 வாலிபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் அந்த பகுதியில் மயில் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இறந்த நிலையில் இருந்த 5 பெண் மயில்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில் மயில் வேட்டையில் ஈடுபட்டவர்கள் திருக்கோளக்குடியைச் சேர்ந்த ராசு மகன் முருகன்(வயது29), மச்சக்காளை மகன் சரத்(19), ராஜேந்திரன் மகன் ராஜதுரை(19), செல்வம் மகன் பாண்டி(19) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அந்த 4 பேர் மற்றும் இறந்த மயில்கள், நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவைகளை திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மதிவாணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் விசாரணைக்குப் பின்பு 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்