கலசப்பாக்கம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது

கலசபாக்கம் அருகே சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதனால் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

Update: 2018-05-16 22:15 GMT
கலசப்பாக்கம்

காட்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த பெரியகாலூர் பகுதியில் காலை 10.30 மணி அளவில் சென்று கொண்டிருக்கும் போது 50 பெட்டிகள் கொண்ட ரெயில் பெட்டியின் 26-வது பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் மோதி நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்கம்பங்களை சரிசெய்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பாமினி எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு காலை 11.20 மணி அளவில் வந்தது. விபத்து காரணமாக மீண்டும் திருப்பி விழுப்புரம் மார்க்கமாக காஞ்சீபுரம், அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு சென்றது. இந்த ரெயில் 1 மணிநேரம் காலதாமதமாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

திருப்பதிக்கு அரக்கோணம் வழியாக செல்வதால் காலதாமதத்தை தவிர்க்க பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சாலை மார்க்கமாக தங்களது பகுதிக்கு சென்றனர். இதேபோல விழுப்புரம் - கரக்பூர் செல்லும் ரெயில் திருவண்ணாமலை வழியாக செல்வதற்கு பதில் சென்னை வழியாக மாற்றிவிடப்பட்டது. புதுச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் செங்கல்பட்டு, சென்னை வழியாக மாற்றிவிடப்பட்டது.

திருப்பதியில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் பயணிகள் ரெயிலும், மாலை 4.35 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விழுப்புரம் - திருப்பதி ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்