கனமழை எதிரொலி ஊட்டியில் படகு போட்டி தள்ளி வைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டியில் நேற்று பெய்த கன மழை காரணமாக படகு போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2018-05-16 22:15 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா கடந்த 5–ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. மேலும் ஊட்டியில் புகைப்பட கண்காகாட்சி, இரவு பஜார், கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான படகு போட்டி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று நடைபெற இருந்தது. போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து மிதி படகில் ஊட்டி ஏரியின் கரையோரத்திற்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.

கனமழை பெய்ததால் போட்டிக்கு தயாராக இருந்த சுற்றுலா பயணிகள் மாற்று படகில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். ஊட்டி படகு இல்லத்தின் மழையின் நடுவே சுற்றுலா பயணிகள் துடுப்பு படகில் குடைப்பிடித்தபடி சவாரி செய்து மகிழ்ந்தனர். பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். அதனை தொடர்ந்து படகு போட்டி மதியம் 3 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து மழை பெய்ததால் படகு போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதன் காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெற வில்லை. படகு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்காமல், ரத்து செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் படகு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்