முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வருகை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) கோவை வருகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-05-16 22:30 GMT

கோவை,

கோவை ரெயில் நிலையம் எதிரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், விடுதலைப்புலிகள், சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதங்கள், போலீஸ் ஆவணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அருங்காட்சியகத்தின் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு கோவை வருகிறார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உள்பட அதிகாரிகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கிறார்கள். விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் ரெயில் நிலையம் எதிரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு வருகிறார். புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் கார் மூலம் மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அவர் இரவு தங்குகிறார். அதன்பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர்க்கண்காட்சியை அவர் தொடங்கி வைக்கிறார்.

முதல்–அமைச்சர் கோவை வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்று காலை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கோவை நிகழ்ச்சியை முடித்து விட்டு கார் மூலம் முதல்–அமைச்சர் மேட்டுப்பாளையம் செல்வதால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் ஆயிரத்து 200 போலீசாரும், புறநகரில் 800 போலீசாரும் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்