புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வில் 87.32 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட அதிகம்

பிளஸ்–2 தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் 87.32 சதவீதம் தேர்ச்சி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.64 சதவீதம் அதிகம் ஆகும்.

Update: 2018-05-16 22:30 GMT

புதுச்சேரி,

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. புதுவை மாநிலத்தில் தேர்ச்சி பட்டியலை வெளியிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த மார்ச் நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 987 மாணவர்களும், 8 ஆயிரத்து 88 மாணவிகளுமாக 15 ஆயிரத்து 75 பேர் தேர்வு எழுதினார்கள். தற்போது வெளியாகி உள்ள தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 163 மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 87.32 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.64 அதிகம் ஆகும். அதாவது இந்த ஆண்டு 83.61 சதவீத மாணவர்களும், 90.52 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 ஆயிரத்து 765 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 5 ஆயிரத்து 114 மாணவர்கள், 6 ஆயிரத்து 131 மாணவிகள் என 11 ஆயிரத்து 245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி 84.82 சதவீதம் ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி 91.02 சதவீதம் ஆகவும் உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 958 மாணவர்களும், 1,352 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். இதில் 728 மாணவர்களும், 1,918 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 83.03 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 75.99 சதவீதமும், மாணவிகள் 88.02 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி 2.57 சதவீதம் அதிகமாகி உள்ளது.

புதுச்சேரியில் 46 தனியார் பள்ளிகளும், ஒரேயொரு அரசுப் பள்ளியும், காரைக்காலில் 4 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

327 மாணவ, மாணவிகள் 200–க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதாவது வேதியியலில் 4 பேரும், கணிப்பொறி அறிவியலில் 19 பேரும், கணிதத்தில் 29 பேரும், பொருளியியல் பாடத்தில் 7 பேரும், வணிகவியல் பாடத்தில் 111 பேரும், கணக்கு பதிவியியல் பாடத்தில் 7 பேரும், வணிக கணித பாடத்தில் 7 பேரும் 200–க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்