பிளஸ்-2 தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 87.06 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வில் மாணவ - மாணவிகள் 87.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது.

Update: 2018-05-17 00:24 GMT
வேலூர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிக்கு சென்றும், ஆன்லைனிலும், செல்போனிலும் பார்த்து தெரிந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 457 மாணவர்களும், 22 ஆயிரத்து 239 மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 696 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதில், 15 ஆயிரத்து 856 மாணவர்களும், 20 ஆயிரத்து 445 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 301 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 81.49 சதவீதமும், மாணவிகள் 91.93 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.06 சதவீதமாகும். வேலூர் மாவட்டம் 4 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 27-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 31-வது இடத்தை பிடித்திருந்தது.

கடந்த ஆண்டு 84.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 2.07 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமுகை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் டீக்கடைகள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 31 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். அவர்களில் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்