குடியாத்தத்தில் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது

குடியாத்தத்தில் தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் ரொக்கம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-05-17 00:30 GMT
குடியாத்தம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் டி.சேகர் (வயது 63), தொழில் அதிபர். இவர், கடந்த 6-ந் தேதி காலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நடந்து வந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அதைத் தொடர்ந்து மர்ம நபர்கள், அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் சேகரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சத்தை கடத்தல் கும்பலிடம் கொடுத்து மீட்டனர். இதனையடுத்து மர்ம நபர்கள், அவரை விடுவித்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடத்தல் கும்பலை பிடிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா ஆகியோர் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மேற்பார்வையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, அருண், வடிவேல் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளரான ஸ்ரீராமுலு மகன் மூர்த்தி (39), குடியாத்தம் கொண்டசமுத்திரம் கவரத்தெருவை சேர்ந்த பாபு என்கிற லோகேஷ் (34), சித்தூர் மாவட்டம் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த பரந்தாமன் மகன் வினோத்குமார் (24), முன்னா என்கிற முனீர்கான் (31), சூசைஜோசப் மகன் ராஜாமணி (28), பாபு மகன் சங்கர் (வயது 25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், கார், மோட்டார் சைக்கிள், கம்ப்யூட்டர் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பெங்களூரு பஸ்வேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த நவீன், அருண், ரபீக், சித்தூரை சேர்ந்த சுதாகர் என்கிற அப்பு ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொழில் அதிபர் சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் ‘ஸ்டீல் கிரில்’ செய்வதற்கு ரூ.70 ஆயிரத்தை குடியாத்தத்தை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளரான மூர்த்தியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டில் ‘ஸ்டீல் கிரில்’ வேலையை முழுவதுமாக செய்து கொடுக்காமல் மூர்த்தி காலம் தாழ்த்தி வந்ததால் சேகர், கடை உரிமையாளரை அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர், சேகரை பழிவாங்க முடிவு செய்து தனது கடையில் வேலை செய்யும் பாபுவிடம் தெரிவித்துள்ளார்.

பாபுவிற்கு பெங்களூருவில் உள்ள கடத்தல் கும்பலுடன் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள கடத்தல் கும்பலை சேர்ந்த நவீன், அருண், ரபீக் ஆகியோரிடம் பேசியுள்ளனர். அவர்கள், சித்தூர் மாவட்டம் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த சுதாகர், முன்னா, ராஜாமணி, சங்கர், வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து அவரை கடத்த திட்டம் தீட்டி உள்ளனர். பின்னர் அவர்களில் 5 பேர் கடந்த 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை குடியாத்தத்தில் தங்கி இருந்து சேகரின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி காலை நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த சேகரை காமராஜர் பாலம் அருகே மூர்த்திக்கு சொந்தமான காரில் கடத்தி உள்ளனர். அத்துடன் அவரை என்.ஆர்.பேட்டையில் உள்ள மாந்தோப்பில் வைத்து தாக்கி உள்ளனர்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளனர். இதனையடுத்து சேகரின் மகன் சசிகுமார், மகள் கார்த்திகா உள்ளிட்ட உறவினர்கள் ரூ.10 லட்சத்தை ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் கும்பலை சேர்ந்த ரபீக், வினோத்குமார் ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அன்று இரவு 9 மணி அளவில் ஆந்திர மாநிலம் யாதமூரி பகுதியில் சேகரை விட்டுவிட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அவர், தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் குடும்பத்தினர் காயத்துடன் இருந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் செல்போன் மூலம் துப்புதுலக்கியதில் மூர்த்தி, லோகேஷ், வினோத்குமார், முனீர்கான், ராஜாமணி, சங்கர் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நவீன், ரபீக் ஆகியோர் மீது ஏற்கனவே பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளது. தற்போது தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்