தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்

தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-17 22:30 GMT
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 25 சதவீத மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 21 முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினர் (எஸ்.சி., எஸ்.டி., மகளிர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) வயது வரம்பு 45 வரையும் இருக்கலாம்.

மேலும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி படித்து முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் போதுமானது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சமாகும், அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி ஆகும். இதில் அரசு மானியமாக 25 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் அனைத்துவித லாபகரமான உற்பத்தி, சேவை தொழில்கள், சுற்றுப்புற சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்கள், திறன் காக்கும் தொழில்கள், ஏற்றுமதி தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி. மகளிர் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில்(2018-19) 37 பேருக்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04146- 226602 என்ற தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்