ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கலெக்டர் உறுதி

நியாயமான கோரிக்கைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு ஜமாபந்தியில் உடனடி தீர்வு காணப்படும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.

Update: 2018-05-17 22:45 GMT
சாத்தூர்

சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 93 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் ஜமாபந்தி 25-ந் தேதி வரை 9 தாலுகாவிலும், 38 பிர்கா மற்றும் 600 வருவாய் கிராமங்களிலும் நடைபெறுகிறது.

நில உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டுமனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டுமனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப்பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

இந்த ஜமாபந்தியின் நோக்கம் வருவாய் கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர்க் கணக்கு போன்றவற்றை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள், புள்ளியியல் துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

முன்னதாக அனைவரும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் பழனிசாமி, சாத்தூர் தாசில்தார் சாந்தி, சாத்தூர் தனி தாசில்தார் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்