2 ஏக்கரில் வளர்க்கப்பட்ட தைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கைகள்

கறம்பக்குடி அருகே 2½ ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட தைல மரங்களை திருநங்கைகள் வெட்டி அழித்தனர். அந்த இடத்தில் புதிதாக தென்னை, வேம்பு, நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

Update: 2018-05-17 22:30 GMT
கறம்பக்குடி,

வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தைல மரக்காடுகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் ஏக்கரில் உள்ள தைலமரங்கள், தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. இந்த தைலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, விவசாயத்தை பாழ்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். இவற்றை அழிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பசுமை விவசாய இயக்கத்தினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தைல மரங்களால் 700 அடி வரை தண்ணீர் கிடைக்காத நிலை உருவானது. இதனால் தைலமரங்களின் கெடுதலை விவசாயிகள் உணர தொடங்கினர். இது குறித்து விழிப்புணர்வும் ஏற்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கை கூட்டமைப்பு மற்றும் ‘பொறந்த ஊருக்கு புகழ் சேரு’ அமைப்பின் சார்பில் தைல மரங்களை அழிப்பது குறித்தும், மண்ணுக்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதுகாப்பது குறித்தும் விவசாயிகளிடம் பிரசாரம் செய்யப்பட்டது.

இதன் முதற்கட்டமாக துவார் ஊராட்சி கெண்டையன்பட்டி பகுதியில் உள்ள, கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியை சேர்ந்த வினோத்குமார்(வயது 37) என்ற விவசாயிக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்ட தைலமரங்களை அழிக்க அவர் ஒத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் பொறந்த ஊருக்கு புகழ் சேரு அமைப்பினர் துவார் கெண்டையன்பட்டி பகுதிக்கு வந்து தைல மரங்களை வெட்டி அழித்தனர்.

இதில் சிறிய மரங்களை அடியோடு அகற்றினர். பெரிய மரங்களையும் அடியோடு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர் அந்த இடத்தில் தென்னை, வேம்பு, நாவல் மரக்கன்றுகளை நட்டனர். திருநங்கைகளின் இந்த முயற்சியை வரவேற்ற அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருங்காலத்தில் அவர்களும் தைலமர வளர்ப்பை கைவிடப்போவதாக தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தைலமரக்காடுகளை அழிக்க சில விவசாயிகள் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் திரு நங்கைகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்