இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு

குமரி மாவட்டத்தின் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில், பச்சை தமிழகம் கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2018-05-17 23:00 GMT
நாகர்கோவில்,

பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் பாண்டியன், வேதக்கண், ரமேஷ், தர்மலிங்கம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சாலைகள் விரிவாக்கம், புதிய தேசிய நெடுஞ்சாலை என்கிற பெயரில் லட்சக்கணக்கான பச்சை மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன. இந்த மரங்கள் என்ன ஆயிற்று, யார் அவற்றை வெட்டினார்கள்? யாருக்கு விற்றார்கள்? அவர்கள் அதற்குரிய விலை கொடுத்தார்களா? அந்த பணம் என்னவாயிற்று? போன்ற தகவல்களை யாரும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

அதேபோல, குமரி மாவட்டம் முழுவதும் கல் குவாரிகளும், மணல் குவாரிகளும், எம்–சாண்ட் ஆலைகளும் சட்டவிரோதமாக இயங்கி கொண்டிருக்கின்றன. பல சமூக விரோத சக்திகள் இந்த வளக்கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கணக்கிட முடியாத அளவு கல், ஜல்லி, எம்–சாண்ட் போன்ற வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. பல வேளைகளில் சில அரசு அதிகாரிகளும் இந்த கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தட்டிக்கேட்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் இயற்கை வளக்கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துகிறோம். இந்த வளக்கொள்ளைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை குமரி மாவட்டம் உடனடியாக வெளியிட்டு, நம் மாவட்ட இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்