ராமநகர் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் இருந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெளியேறினார்

ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. நேற்று திடீரென்று வெளியேறினார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வெளியேறினாரா? என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-05-17 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.களை பா.ஜனதாவினர் இழுத்து விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னருக்கு எதிராக விதானசவுதாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ரெசார்ட்டில் இருந்து விதானசவுதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் மீண்டும் அவர்கள் ரெசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ரெசார்ட்டில் இருந்த, பீதர் மாவட்டம் உம்னாபாத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜசேகர பட்டீல் திடீரென்று அங்கிருந்து வெளியேறினார். அவரை முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தடுத்து நிறுத்தினார். ஆனாலும் அவர் கேட்காமல் காரில் ஏறி செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த போலீசார் ராஜசேகர பட்டீலை பிடித்தனர். இதனால் அவர் ஆத்திரமடைந்தார். பின்னர் ரெசார்ட்டில் இருந்து காரில் ராஜசேகர பட்டீல் புறப்பட்டு சென்றார்.

உம்னாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4 முறையாக தொடர்ந்து ராஜசேகர பட்டீல் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு கட்சியில் சரியான பதவி கொடுக்கவில்லை என்பதால், காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ராஜசேகர பட்டீல் கூறுகையில், “எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ரெசார்ட்டில் இருந்து வெளியேறியுள்ளேன். பெங்களூருவில் உள்ள எனது வீட்டில் ஓய்வெடுக்க உள்ளேன். பீதருக்கு நான் செல்லவில்லை. பா.ஜனதாவுக்கு நான் ஆதரவு அளிக்க இருப்பதாக வந்த தகவல் உண்மையல்ல. பா.ஜனதாவினர் யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே நான் இருப்பேன்“ என்றார். 

மேலும் செய்திகள்