அரசியல் பயணத்தில் எடியூரப்பா கடந்து வந்த பாதை

தென் இந்தியாவில் பா.ஜனதாவை முதன் முதலில் ஆட்சி கட்டிலில் அமர்த்திய எடியூரப்பா, அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையை இங்கே விரிவாக காண்போம்.

Update: 2018-05-17 22:51 GMT
பெங்களூரு,

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா புக்கனகெரே கிராமத்தில் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி எடியூரப்பா பிறந்தார். இவரது பெற்றோர் சித்தலிங்கப்பா- புட்டதாயம்மா ஆவர். எடியூரப்பாவுக்கு துமகூரு மாவட்டம் எடியூரில் உள்ள புகழ்பெற்ற சிவதத்தி கோவிலில் பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. தனது 4 வயதில் அவர் தனது தாயை இழந்தார். மண்டியாவில் தனது பள்ளி படிப்பை முடித்த எடியூரப்பா, கல்லூரி படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பொது சேவையில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 1965-ம் ஆண்டு சமூகநலத்துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றிய எடியூரப்பா, அந்த பணி பிடிக்காததால் அதில் இருந்து 2 ஆண்டுகளில் விலகினார். இதைத்தொடர்ந்து அவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் உள்ள அரிசி ஆலையில் அலுவலக ஊழியராக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து மித்ராதேவி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரு மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற 3 மகள்களும் உள்ளனர்.

கடந்த 1970-ம் ஆண்டு சிகாரிபுரா தாலுகா ஜன சங்கத்தின் தலைவராக எடியூரப்பா பதவி ஏற்றார். கடந்த 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ருசித்தார். மேலும் சிகாரிபுரா தாலுகா ஆர்.எஸ்.எஸ். தலைவராக பதவி ஏற்ற எடியூரப்பா, அவசரநிலை பிரகடனத்தின் போது கைதாகி சிறை சென்றார். 1980-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் சிகாரிபுரா தொகுதி தலைவராக நியமிக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முறையாக சிகாரிபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி வெற்றிவாகை சூடினார்.

கட்சியில் படிப்படியாக முன்னேறிய எடியூரப்பா, கடந்த 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராகவும், 1988-ம் ஆண்டு மாநில பா.ஜனதா தலைவராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றிக்கனியை பறித்தது. இதைதொடர்ந்து எடியூரப்பா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிகாரிபுராவில் போட்டியிட்ட எடியூரப்பா தோல்வி அடைந்தார்.

இதையடுத்து மேல்-சபை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது பா.ஜனதா 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தின. முதல்-மந்திரியாக தரம்சிங் பதவி ஏற்றார். அப்போது பா.ஜனதா சார்பில் எடியூரப்பா 2-வது தடவையாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றார். தேவேகவுடா- குமாரசாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் குமாரசாமி திடீரென்று காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார். அத்துடன் பா.ஜனதாவுடன், குமாரசாமி கைகோர்த்து ஆட்சி அமைத்தார். முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக எடியூரப்பாவும் பதவி ஏற்றனர். எடியூரப்பாவுக்கு நிதித்துறையை கவனித்து வந்தார். இரு கட்சிகளும் தலா 20 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை வகிப்பது என கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, 20 மாதங்கள் கடந்தும் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, குமாரசாமி பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் ஆட்சியில் குமாரசாமியின் தலையீடு அதிகமாக இருந்ததால், அதிருப்தி அடைந்த எடியூரப்பா 7 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் 110 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் எடியூரப்பா சிகாரிபுராவில் தன்னை எதிர்த்து களமிறங்கிய முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.

சுயேச்சைகள் ஆதரவுடன் 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக பதவி ஏற்றார். ஆனால் சட்டவிரோதமாக கனிமசுரங்க முறைகேடு, அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாக எடியூரப்பா மீது புகார் எழுந்தது. இந்த புகாரில உண்மை இருப்பதாக லோக்-ஆயுக்தா விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த எடியூரப்பா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பில் 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இதில் எடியூரப்பா உள்பட 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அக்கட்சி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. எடியூரப்பா தனித்து போட்டியிட்டதால், பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி மீண்டும் எடியூரப்பா பா.ஜனதாவில் ஐக்கியமானார். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றியை ருசித்தது. இதில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லோக்-ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது பதிவு செய்த 15 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ரூ.40 கோடி கனிமசுரங்க முறைகேடு வழக்கில் இருந்து எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர் மீண்டும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவி எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்டது.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 75 வயது நிரம்பிய எடியூரப்பா தலைமையில் கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. முதல்-மந்திரி வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார். சட்டவிரோத நில முறைகேடு தொடர்பாக எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக போராடி வரும், எடியூரப்பாவை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இருப்பினும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தொகுதியில் இவர் 9 தடவை போட்டியிட்டு 8 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது நான் மே 17-ந்தேதி முதல்-மந்திரி ஆவது உறுதி என முழங்கினார். அதன்படியே மே 17-ந் தேதியான நேற்று அவர் கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். எடியூரப்பா 3-வது தடவையாக முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துள்ளார். தென் இந்தியாவில் முதன் முறையாக பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர், எடியூரப்பா என்றால் மிகையல்ல. 

மேலும் செய்திகள்