வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வன பாதுகாவலர் காயம்

தானேயில் வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வன பாதுகாவலர் காயமடைந்தார்.

Update: 2018-05-17 23:29 GMT
தானே,

தானே மாவட்டம் திட்வாலா காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி வந்தனர். குறிப்பாக திட்வாலாவில் காணப்படும் காட்டுப்பன்றிகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டன. இந்தநிலையில் சம்பவத்தன்று திட்வாலா காட்டுப்பகுதியில் ஆசாமிகள் சிலர் வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தலைமை வனப்பாதுகாவலர் எஸ்.ஆர்.கதமுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த மர்ம கும்பல் ஒன்று போலீசாரை கண்டதும் தப்பி ஓடத்தொடங்கியது.

இதையடுத்து வனத்துறை போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்றனர். அப்போது திடீரென அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் வனப்பாதுகாவலர் பங்கஜ் கோட்ரே(வயது36) குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

இதையடுத்து அவரை உடன் சென்ற போலீசார் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திட்வாலா போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்