ரூ.33½ லட்சம் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து மும்பைக்கு ரூ.33½ லட்சம் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-17 23:40 GMT
மும்பை,

மும்பை ஜோகேஷ்வரி விக்ரோலி இணைப்பு சாலையில் சிலர் கஞ்சா கடத்த இருப்பதாக மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி ஒரு கார் வந்தது. காரில் பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் காரில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த காரில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 167 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கைதானவர்கள் மும்பை சாக்கிநாக்கவை சேர்ந்த பெண் பர்வின் காசிம்(வயது40) மற்றும் அவரது உறவினர் தவுசிக் ரபிக் கான்(19) என்பதும் அவர்கள் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து இந்த கஞ்சாவை மும்பைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்துக்கு மும்பையை சேர்ந்த மற்றொரு பெண் மூளையாக செயல்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்