தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை மனு

தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2018-05-18 22:27 GMT
கடலூர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.வை சந்தித்து விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக கையப்படுத்தப்படும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் அவரது ஆலோசனையின்பேரில் மாவட்ட வருவாய் அதிகாரி(நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை) மங்களத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு எங்கள் கிராமங்களான அன்னவல்லி, வழிசோதனைப்பாளையம் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்த இருப்பதை அறிந்தோம். பின்னர் இது தொடர்பாக சில கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரி(நில எடுப்பு) ஆகியோரிடம் மனுவாக கொடுத்தோம்.

இந்த நிலையில் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்போவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே எங்களிடம் கையகப்படுத்த இருக்கும் நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதலாக இழப்பீட்டு தொகையை வழங்கினால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி(நில எடுப்பு) இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்