வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது

செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், வேறு பெண்களுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளாரோ என்று கருதி அவரை இரும்பு கம்பியால் அடித்து, கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-05-19 00:15 GMT
களியக்காவிளை,

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மரியகிரி தெங்குவிளையை சேர்ந்தவர் சர்ஜின் (வயது 28). கேரளாவில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிபிதா (27) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு மனைவி பிபிதாவுடன் சொந்த ஊரான தெங்குவிளையில் சர்ஜின் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 5 வயதில் ஏஞ்சல் சானியா என்ற மகள் உள்ளாள்.

இந்தநிலையில் சமீபகாலமாக சர்ஜின், அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. இதனால் வேறு பெண்ணுடன் கணவர் சர்ஜினுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பிபிதாவுக்கு எழுந்தது. இதை அவர் சர்ஜினிடம் கேட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பிறகு இதுதொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும், சர்ஜினின் உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்தது.

இதற்கிடையே சர்ஜினின் தாயாரும், குழந்தை ஏஞ்சல் சானியாவும் கேரளாவில் உள்ள உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டனர். இதனால் நேற்று முன்தினம் இரவு சர்ஜின், பிபிதா மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது, நள்ளிரவில் சர்ஜினின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு வீட்டிற்குள் சர்ஜின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடியும், அவரது அருகில் ஒரு இரும்பு கம்பியுடன் பிபிதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் திரண்டதை கண்ட பிபிதா அவர்களிடம் கூறிய போது, கணவரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் பதற்றத்துடன் இருந்த பிபிதா, வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டார்.

பிபிதாவை விரட்டினால் ஏதேனும் விபரீத செயலில் ஈடுபட்டு விடுவார் என்று நினைத்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்ஜினை மட்டும் மீட்டு, அருகில் கேரளாவில் உள்ள பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவரை கொல்ல முயன்ற பிபிதா வீட்டு மாடியிலேயே இருந்தார். பொதுமக்களும் வீட்டை சுற்றி நின்றபடி இருந்தனர். இதற்கிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியினர், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் உடனடியாக வராமல் தாமதமாக காலையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பிபிதாவை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் பிபிதா கூறுகையில், காதல் கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போன் அழைப்புகள் வந்தன. அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்ட போது மழுப்பலாகவே பதிலளித்தார். மேலும் என்னிடம் ஒழுங்காக பேசாமல் அலட்சியப்படுத்தினார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எங்களுக்கும் தகராறு ஏற்பட்டதால், கணவர் சர்ஜினை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி, நள்ளிரவில் சர்ஜின் கண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, இரும்பு கம்பியால் ஓங்கி தலையில் அடித்தேன். இதனால் சர்ஜின் சத்தம் போட்டார். அந்த சமயத்தில் கத்தியால் அவருடைய கழுத்தை அறுத்தேன்.

ஆனால், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விட்டதால், கொலை செய்யும் முயற்சியை கைவிட்டேன். மேலும் பதற்றத்தில் இருந்ததால் வீட்டு மாடிக்கு சென்று விட்டேன், என்றார்.

இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிபிதாவை கைது செய்தனர். கணவரை கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவரை இரும்பு கம்பியால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொல்ல முயன்ற பிபிதா பொதுமக்களை பார்த்ததும் வீட்டு மாடிக்கு சென்று அங்கேயே நின்றார். பதற்றத்தில் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரவில்லை. பொதுமக்களும் வீட்டை சுற்றியபடி நின்றனர். இதற்கிடையே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவில்லை. விடிந்த பிறகு சென்ற போலீசார், பிபிதாவை பிடித்து சென்றுள்ளனர். போலீசாரின் அலட்சியத்தால், பொதுமக்கள் விடிய, விடிய காத்திருந்து பிபிதாவை கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நள்ளிரவு நடந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக காலையில் சென்று விசாரணை நடத்திய போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்