சிமெண்ட் மேற்கூரை உடைந்து கீழே விழுந்து கட்டிட தொழிலாளி சாவு, 2 பேர் மீது வழக்கு

சிமெண்ட் மேற்கூரை உடைந்து கீழே விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாயப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-05-19 21:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் பாரப்பாளையத்தில் அஸ்வின் என்பவருக்கு சொந்தமான சாயப்பட்டறை உள்ளது. இந்த சாயப்பட்டறையில் சிமெண்ட் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது.

திருப்பூர் பெரியாண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார்(வயது 34) தலைமையில் சின்னிகவுண்டன்புதூரை சேர்ந்த பழனிகுமார்(48) மற்றும் ரவி ஆகியோர் கட்டிட வேலை செய்து வந்தனர்.

அப்போது 20 அடி உயரத்தில் சிமெண்ட் மேற்கூரையை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்து பழனிகுமார் கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பழனிகுமாரின் மனைவி ஜோதி, திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக சாயப்பட்டறை உரிமையாளர் அஸ்வின், கட்டிட தொழிலாளி ஆனந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்