ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு

ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2018-05-19 22:30 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய வட்டங்களை சேர்ந்த 203 கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்கான ஜமாபந்தி நேற்று முன்தினம் நடந்தது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட 58 வருவாய் கிராமங்களில் தென்னிலை குறுவட்டத்திற்கு உட்பட்ட அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர் (மேல்பாகம் மற்றும் கீழ்பாகம்), எல்லைக்காட்டு ராமச்சந்திரபுரம், தென்னிலை (தென்பாகம் மற்றும் மேல்பாகம்), துக்காச்சி, தென்னிலை (கீழ்பாகம்) ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்கு கள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா? என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவினையும், 1 பயனாளிக்கு கார்வழி, நொய்யல் நீர்த்தேக்கப்பகுதியிலிருந்து விளைநிலத்திற்காக மண் எடுத்துக்கொள்வதற்காக அனுமதியும் வழங்கப்பட்டன.

இதில் வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாலசுப்பிரமணியன், நில அளவை பிரிவு உதவி இயக்குனர் ரவீந்திரன், வட்டாட்சியர் பிரபு, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ராம்குமார், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. 

மேலும் செய்திகள்