ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பலி

குடியாத்தத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-19 23:15 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 3.45 மணி அளவில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த ஆட்டோவை எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் முரளி (வயது 26) என்பவர் ஓட்டினார். ஆட்டோவில் எர்த்தாங்கல் கிராமம் கன்னிகாபுரம் பச்சையப்பா நகரை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி உஷா (38), குடியாத்தம் நெல்லூர்பேட்டை என்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த பாரதமுத்து மகன் ரங்கன் (25), குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையை சேர்ந்த வினோத்குமார் மனைவி மைதிலி (35) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை சோலை நகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது பலத்த சூறைக்காற்றால் புளியமரம் சரிந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த உஷா ஆட்டோவிலேயே மரத்தின் இடையில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோவில் இருந்த முரளி, ரங்கன், மைதிலி ஆகியோரை பலத்த காயங்களுடன் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரங்கனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியான உஷாவின் கணவர் விஜயகுமார் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதேபோல் விபத்தில் பலியான ரங்கனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விழாக்களில் டிரம்ஸ் அடிக்கும் வேலை செய்து வந்தார். 

மேலும் செய்திகள்