வேளச்சேரியில் வாகனங்களை திருடிய 3 பேர் கைது

சென்னை கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-20 23:54 GMT
ஆலந்தூர்,

சென்னை கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் அடிக்கடி திருட்டுப்போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர்கள் வேலு, சண்முகம் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேளச்சேரி விஜயநகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனம் ஒன்றை எடுக்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் (வயது 28), அம்பத்தூர் கல்லிக்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன் (26), துரைப்பாக்கத்தை சேர்ந்த பிரபு (30) என்பது தெரிய வந்தது.

மதன் குறும்படங்களை தயாரிக்க திட்டமிட்டதாகவும், அதற்காக பணம் தேவைப்பட்டதால் தனது நண்பர்களான விஸ்வநாதன், பிரபு ஆகியோரின் உதவியுடன் கிண்டி, வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேன், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை திருடியதும், ஆனால் அதை விற்று கிடைத்த பணத்தை கொண்டு குறும்படம் எடுக்காமல் உல்லாசமாக வாழ்ந்து வந்தது, 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வேன்கள், 5 ஷேர் ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்