காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த பெண்கள் சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

சீராக குடிநீர் வழங்கக்கோரி அவினாசி ஒன்றிய அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் பெண்கள் வந்து மனு கொடுத்தனர்.

Update: 2018-05-21 22:26 GMT
அவினாசி,

அவினாசி ஒன்றியம் முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 120 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போய் பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த பல மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகமும் செய்யவில்லை. இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

அதையே அவர்கள், குடிநீராகவும், பிற உபயோகத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதை தவிர்க்கவும், தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் தங்கள் பகுதியின் குடிநீர் தேவையை உடனே பூர்த்தி செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் நேற்று அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு அவர்கள், தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை ஒன்றிய ஆணையாளர் பிரபாகரனிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்