அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை

அவினாசி அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சி தாங்க முடியாமல் அவனுடைய பெற்றோர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2018-05-22 23:30 GMT
அவினாசி, 


இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

நாமக்கல் மாவட்டம் வெப்படைகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 54). விவசாயி. இவருடைய மனைவி சுதா (45). இவர்களுடைய ஒரே மகன் நிஷாந்த் (22). ஈரோட்டில் உள்ள கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.எஸ்.சி. ஐ.டி. முதலாமாண்டு படித்து வந்தான். அதே வகுப்பில் இவருடைய நண்பரான நீலகிரி மாவட்டம் பைகாரா மின்வாரிய குடியிருப்பை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவருடைய மகன் கிருபாகரன் (20) என்பவரும் படித்து வந்தார். கிருபாகரன் ஈக்காட்டூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெப்படை காட்டூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு பணியை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நிஷாந்த் ஓட்டினார். பின் இருக்கையில் கிருபாகரன் அமர்ந்து இருந்தார்.

அவினாசியை அடுத்த நாதம்பாளையம் பிரிவு பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் மீது மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த கணேசன் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதோடு சரக்கு ஆட்டோவின் பின் பகுதியிலும் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கணேசன் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நிஷாந்த், அவருடைய நண்பர் கிருபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிஷாந்த் மற்றும் கிருபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். கணேசனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்த தகவல் வெப்படை காட்டூரில் இருந்த நிஷாந்தின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்தின் தாய் சுதா, தந்தை சக்திவேல் மற்றும் உறவினர்கள் ஒரு காரில் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த நிஷாந்த் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனால் அருகில் இருந்த உறவினர்களும் துக்கம் தாங்க முடியாமல் அழுது புலம்பினார்கள். கண்ணுக்கு கண்ணாய், உயிருக்கு உயிராய் வளர்த்த ஒரே மகனை இழந்து விட்டோமே, நாம் இனி யாருக்காக வாழப்போகிறோம், இனி எனது மகனை எப்போது பார்ப்போம் என பெற்றோர் அழுது கண்ணீர் வடித்தனர்.

மகனின் உடலை பார்த்து இரவு வரை கதறி அழுதார்கள். ஆனால் அவர்களால் மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகனை இழந்த துயரம் தாங்காமல் நிஷாந்தின் பெற்றோர் அழுது மிகவும் சோர்வடைந்து இருந்தனர். இனி நாம் வாழ்ந்து பயனில்லை என்று சக்திவேலும், அவருடைய மனைவியும் விஷத்தை குடித்து தற்கொலை கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உறவினர்களிடம் காருக்குள் சென்று அமர்ந்து இருப்பதாக கூறிவிட்டு காருக்கு சென்றனர்.

இதற்கிடையில் இரவில் மழை ஓய்ந்த பின்னர் பார்த்தபோது சக்திவேலின் உறவினர்கள் காருக்குள் சென்று பார்த்தபோது அங்கு சக்திவேலும், சுதாவும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் காருக்குள் பூச்சி மருந்து பாட்டிலும் குளிர்பானம் குடித்த பிளாஸ்டிக் டம்ளரும் கிடந்தது. அப்போதுதான் அவர்கள் இருவரும் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது.

உடனே அவர்கள் இருவருக்கும் அவினாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இருவரும் உயிரிழந்தனர். மகன் இறந்த அதிர்ச்சியில் பெற்றோர் விஷத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்