வால்பாறை நகருக்குள் நள்ளிரவில் வரும் சிறுத்தைப்புலி

வால்பாறை நகருக்குள் நள்ளிரவில் சிறுத்தைப்புலி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2018-05-23 22:45 GMT
வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் வால்பாறை நகரம் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு அருகே சிறுகுன்றா, நடுமலை, ஸ்டேன்மோர், சவரங்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன.

இங்கு கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றை பட்டிகளில் அடைத்து வளர்க்காமல் சாலைகளில் திரிய விட்டு விடுகின்றனர். அவற்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தைப்புலிஅடிக்கடி ஊருக்குள் வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை சிறுத்தைப்புலிபிடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது.

எனவே கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிய விடுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை யினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கால்நடைகளை சாலைகளில் திரியவிடுவது தொடர்கிறது. இதன் காரணமாக கால்நடைகளை சாப்பிட்டு பழக்கப்பட்ட சிறுத்தைப்புலிஅடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் நகருக்குள் வருகிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதிக்குள் இருந்து தேயிலை தோட்டம் வழியாக வால்பாறை நருக்குள் சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கால்நடைகளை பட்டிகளில் அடைத்து வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அது போல் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அவற்றை செய்யாமல் அலட்சியமாக இருந்தால் சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியாது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்