பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் மீட்பு

அவினாசி அருகே பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

Update: 2018-05-25 22:15 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராயர் கோவில் விதியை சேர்ந்தவர் மணி என்கிற ஆறுமுகம். இவருடைய மனைவி மசறியம்மாள் (வயது 55). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் அந்தபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன்கள் சுபாஷ் (20), வெங்கடேசன் (17) ஆகிய 2 பேரும் கிணற்றுக்குள் குதித்து மசறியம்மாளை காப்பாற்ற முயன்றனர். இதில் சுபாஷ் தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கினார்.

தண்ணீரில் தத்தளித்த மசறியம்மாளை வெங்கடேஷ் மீட்டு அங்கிருந்த படிக்கட்டில் அமரவைத்தார். பின்னர் சுபாசை வெங்கடேஷ் மீட்க முயன்றார். ஆனால் அவரால் சுபாசை மீட்க முடியவில்லை. இதையடுத்து கிணற்றுக்குள் இருந்து வெங்கடேஷ் கூச்சல் போட்டார் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மசறியம்மாளையும், வெங்கடேசையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜதுரை தலைமையில் வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று சுபாசை மீட்கும் முயற்சில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு படை வீரர்களை கிணற்றில் கூடு கட்டியிருந்த குளவிகள் கொட்ட தொடங்கியது. ஆனாலும் குளவி கூட்டை கலைத்து விட்டு தேடும் பணியை தொடர்ந்தனர். இதற்காக கிணற்றில் மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்னர் கிணற்றின் அடியில் உள்ள சகதியில் சுபாஷ் உயிரிழந்த நிலையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்