திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2018-05-25 23:04 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த் ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக கோவிலை சுற்றி வந்த தேர்கள் மாலையில் தேரடியை அடைந்தன.

பிரம்மோற்சவ விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதிஉலாவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த் ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்