திருக்காமீசுவரர் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்-அமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்

வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் கோவில் தேரோட்டம் நேற்றுக் காலை நடைபெற்றது. இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2018-05-27 23:19 GMT
வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த , பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் சாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகங்களும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகளும் நடந்து வருகின்றன. இரவில் நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த விழாவில் நேற்று முன்தினம் சாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுக் காலை 7-30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், இந்து அறநிலையத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, அற நிலையத்துறை ஆணையர் தில்லைவேல், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், ஐ.ஜி. சுரேந்தர் யாதவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். திருக்காமீசுவரர் தேர், விநாயகர் தேர், அம்மன் தேர் ஆகிய 3 தேர்களும், வில்லியனூரின் 4 மாட வீதிகளில் வலம் வந்து தேர்நிலையை அடைந்தன.

இந்த விழாவையொட்டி வில்லியனூருக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்-மோர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.புதுவை, திருக்கனூர், திருபுவனை, மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) முத்துப்பல்லக்கு உற்சவமும், 30-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. 31-ந் தேதி சண்டிகேசுவரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி தமிழரசன் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்